புதிய பயங்கரவாதச் சட்டத்தால் அழுத்தம் கொடுக்கும் சர்வதேசம்

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு, சர்வதேச இராஜதந்திரிகள் ஊடாக இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் கடந்த மாதம் 25 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீரிக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டவரைபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துள்ளது. நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட மிக மோசமான வரைபாக இது அமைந்துள்ளது எனவும் அது சாடியுள்ளது.

மேலும், பயங்கரவாதச் சட்டவரைபு கடந்த வருடம் வெளியாகியபோது அதில் 4 திருத்தங்களைக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.

அவற்றில் ஒரு திருத்தம் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய திருத்தங்கள் புறந்தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் வெளிநாடுகளினால் அங்கீகரிக்கக் கூடிய வகையில் இல்லை.

உலக நாடுகளில் உள்ள பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை மீறிய வகையில், மக்கள் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் இலங்கை அரசு தயாரித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் கண்டித்துள்ளனர்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும், இராஜதந்திரிகள் அழுத்தங்களைக் கொடுத்துள்ளனர்.

You might also like