இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைப்பது உறுதி!

ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கு இலங்கைக்கு சகலவித அனுமதியும் கிடைத்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குவதற்குரிய யோசனைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்தான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த குறித்த வரிச்சலுகை, மனித உரிமை விவகாரங்களை அடிப்படையாகக்கொண்டு நிறுத்தப்பட்டது.

எனினும், 2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அதை மீள பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது.

இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் பச்சைக்கொடியும் காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீள வழங்கக்கூடாது என்று கோரி 52 ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை முன்வைத்திருந்தனர்.

இந்த தீர்மானம் மீது பிரசெல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு 119 உறுப்பினர்கள் மாத்திரம் ஆதரவளித்தனர்.

தீர்மானத்துக்கு எதிராக 436 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து குறித்த யோசனை ஐரோப்பிய அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 வருடங்களுக்கு மாத்திரமே இலங்கைக்கு இந்த வரிச்சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

GSP+ வழங்குவதற்கு எதிரான யோசனை தோற்கடிப்பு

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்க ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சர்களின் சபை அனுமதியளித்துள்ளது.

எனினும், எதிர்வரும் 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே இந்த வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்கப்பெறுவது தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கக் கூடாது என வலியுறுத்தி, ஐரோப்பிய ஒன்றியத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கான கடப்பாடுகளை இலங்கை நிறைவேற்றியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like