மாகோ விபத்தில் உயிரிழந்த வவுனியா மாணவி உயர் தரத்தில் முதலிடம்

2016ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றவர் அண்மையில் மாகோ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த சிவதுர்க்கா சத்தியநாதன் என தெரிவிக்கப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்கிய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவியான சிவதுர்க்கா, மிகச்சிறந்த பெறுபேற்றை பெறக்கூடிய மாணவி என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அனைவரதும் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி, கணித பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை சிவதுர்க்கா பெற்றுள்ள போதிலும், அவர் இவ்வுலகைவிட்டு பிரிந்துச் சென்றுள்ளமை அனைவரையும் மேலும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியா பிரபல பெண் வைத்திய அதிகாரியான கௌரி மனோகரி நந்தகுமார் மற்றும் அவரது பெறாமகளான சிவதுர்க்கா சத்தியநாதன் ஆகியோர் கடந்த ஒக்டோபர் மாதம் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது மாகோ பிரதேசத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like