வவுனியா செட்டிக்குளத்தில் வறுமையின் கொடூரத்தில் வாழ்ந்த குடும்பத்துக்கு மஸ்தான் எம்.பி நேரில் சென்று உதவி

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராமத்தில் தனது இரண்டு கண்களின் பார்வையையும் இழந்து மிகவும் வரிய நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் வழங்கிவைத்தார்.

குறித்த குடும்பம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை உறுதிப்படுத்திக்கொண்ட மஸ்தான் எம்.பி அவர்களை சந்தித்து அந்த குடும்பத்தின் முக்கிய தேவைகளாக காணப்பட்ட குடிநீருக்கான கிணறு மற்றும் வீட்டின் மின்சார வசதிகள் என்பவற்றுடன் மாதாந்தம் 5000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்குதலுடன் குறித்த பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளையும் சுய தொழிலாக மந்தை வளர்ப்புக்கான உதவிகளையும் வழங்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மஸ்தான் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

இந்த குடும்பம் கடந்த நான்கு வருடங்களாக சொல்லணாத்துயரங்களை அன்பவித்து வந்துள்ளமை வேதனை அளிக்கிறது அத்துடன் தனது பள்ளி செல்லும் குழந்தையின் உதவியுடன் கடைகளியில் தர்மம் கேட்டு தமது காலத்தை கடத்துகின்றமை மிகவும் வேதனையான ஒரு விடையமாகும்.

இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களூடாகவே நான் அறிந்துகொண்டேன், எனவே சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் இவ்வாறான தேவைகளுக்கு பயன்படுத்தினால் சமூகத்திற்கும் தேவை உடையவர்களுக்கும் சேவைகள் சரியாக சென்றடையும்பொழுது  அதில் உங்களுக்கும் பங்குண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்.

அத்துடன் இந்த உதவிகளை என்னுடன் இணைந்து வழங்குவதற்கு முன்வந்த நிறுவனங்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் நாங்கள் உதவி செய்துவிட்டோம் என்பதற்காக உதவி செய்வதற்கு எண்ணியுள்ளவர்கள் நின்றுவிடாமல் தங்களாலான உதவிகளை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like