ஆச்சிபுரம் தமிழ்க்கிராமம் மயிலங்குளத்துடன் இணைக்கப்படவில்லை

வவுனியா பிரதேசசெயலகத்திற்குட்பட்ட ஆச்சிபுரம் தமிழ்க்கிராமம், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிங்களக் கிராமமான மயிலங்குளத்துடன் இணைக்கப்படவில்லை என அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருள்குமார்  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆச்சிபுரம் கிராமம், சிங்கள கிராமத்துடன் இணைக்கப்பட்டதாக கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தபோதும்,  மக்களை சந்தித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவையாளர், வரைபடத்தில் காணப்பட்ட தவறாலே தான் அவ்வாறு கூறப்பட்டதாக விளக்கமளித்திருந்தனர்.

வவுனியா சமணங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒருபகுதி மயிலங்குளம் கிராமசேவகர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக, கடந்த புதன்கிழமை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அருள்குமார் தெரிவித்திருந்த நிலையில் கிராம மக்களிடையே பதற்றம் ஏற்பட்டிருந்தது.

2000 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட ஆச்சிபுரம் கிராமத்தில் 365 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆச்சிபுரம் கிராமத்திலுள்ள மக்களுக்கு வவுனியா பிரதேச செயலத்தினூடாக காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

வீடடுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அங்கு சென்றிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மக்களை சந்தித்த எஸ்.அருள்குமார் வரைபடத்தில் வீடமைப்பு அதிகார சபையின் வரைபடத்தில் ஏற்பட்ட தவறு காரணமாகவே தான் அவ்வாறு தெரிவித்ததாகவும் எனினும் கிராமம் பிரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமது கிராமமத்திலுள்ள அனைவருக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றுமுதல் எந்தவாரு பிரச்சினையும் ஏற்படாது என நம்புவதாகவும் ஆச்சிபுர கிராம மக்கள் தெரிவித்தனர்.

You might also like