யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா.. கசக்கி எறியப்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள்…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார்.

அவரது சடலம் மறுநாள் ஆள் நடமாட்டமற்ற பற்றைக்குள் இருந்து மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 9ஆம் வட்டாரம் வல்லன் பகுதியைச் சேர்ந்தவர் வித்தியா.

அம்மா அக்கா அண்ணா என ஒரு சிறிய குடும்பத்தின் கடைக்குட்டியாக, மிகவும் செல்லமாக வித்தியா வளர்ந்து வந்துள்ளார்.

வித்தியா கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளிவந்ததும் புங்குடுதீவு பகுதி முழுதும் கலவரபூமியாகியது.

இந்த செய்தி காட்டுத்தீயாய் நாடு முழுவதும் பரவியது. கொலைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறும், வித்தியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இலங்கை முழுவதிலும் உள்ள மக்கள் போராட்டங்களை நடத்தினார்கள்.

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என அனைவரும், இந்த செய்தியைக் கேட்டு கொதித்தார்கள், போராட்டங்களை முன்னெடுத்தார்கள், நீதி கோரி பல கோணங்களில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்தச் சம்பவம் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் பாதித்திருந்தது. இந்த நிலையில் உடனடியாக நீதி வழங்கப்படவேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற எழுச்சி ஏற்பட்டது.

முதலில் குறித்த கொலை சம்பவத்தில் சகோதரர்கள் மூவரை பொலிஸார் கைது செய்தனர். தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒருவர் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தொடர் விசாரணைகளின் பின் மேலும் 8 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில்தான் மாணவி படுகொலை செய்யப்பட்டு 2 வாரங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வித்தியாவின் தாயையும், சகோதரனையும் சந்தித்து கலந்துரையாடினார்.

கடந்த வருடம் மார்ச் 8ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க வடக்கு மாகாண பெண்கள் அமைப்பைச் சந்தித்தார்.

அப்போது, மாணவி வித்தியாவின் தாயார் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 3 தாய்மார்களுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.

மேலும், வித்தியா கொலையில் மொத்தமாக 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். ஏனைய 10 பேருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி வித்தியா கொலை வழக்கின் 10 சந்தேகநபர்களுக்கு எதிராக நேற்று (12) யாழ் மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியனிடம் பாரப்பட்டுத்தப்பட்டுள்ளது. குறித்த குற்றப்பத்திரத்தை இரும்புப்பெட்டகத்தில் வைக்குமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டிருந்தார்.

வித்தியா கொலை செய்யப்பட்டு இன்றுடன் 2 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமே.

ஆனால் குறித்த வழக்கு விசாரணைகள் 98 வீதம் முடிவடைந்து விட்டதாகவும். குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2 வருட முடிவில் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதோடு இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது 10 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் உள்ளனர்.

இதுவே வித்தியா கொலையில் தற்போதைய நிலை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. எப்போது வித்தியாவுக்கு நீதி கிடைக்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பது ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் எதிர்பார்ப்பு என்றால் அது மிகையாகாது.

You might also like