கிளிநொச்சியில் தாதியர்களது மகத்துவத்தை போற்றும் சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வுகள் தலைமைத் தாதிய பரிபாலகி இரவீந்திரன் மற்றும் மூத்த தாதிய உத்தியோகத்தர்களது வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்டது.

தாதியர்களது மகத்துவத்தை போற்றி வருடா வருடம் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கான நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டன.

இதன் போது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் மைதிலி உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தாதியத்துக்கான தமது கௌரவத்தினைச் செலுத்தியிருந்தனர்.

கிரீமிய யுத்தத்தின் போது சிறந்த முறையில் நோயாளர் பராமரிப்பினை ஒழுங்கமைத்திருந்த விளக்கேந்திய பெருமாட்டி என அனைவராலும் அறியப்பட்ட நவீன தாதியத்தின் தாயாரான புளோரன்ஸ் நைற்றிங்கேலினது பிறந்த தினமே சர்வதேச தாதியர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த போர்க்கால சூழ்நிலையில், 02.02.2009 உடையார்கட்டு பாடசாலையில் இடம்பெயர்ந்து இயங்கிய கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் கடமையின் போது உயிர்நீத்த தாதிய உத்தியோகத்தர் கஜேந்தினி உட்பட தமது உயிர்களை மக்களுக்காக அர்ப்பணித்த அனைத்து சுகாதாரத்துறைப் பணியாளர்களையும் நினைவு கூறும் வகையில் இந்த தாதியர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வின் போது தாதியர்களின் சத்தியபிரமாணம் எடுத்தல், சிறப்புரைகள் மற்றும் தாதியர் தினச் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like