சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு தயார்; வடக்கு மாகாண சுகாதார அமைச்சு

யுத்த காலத்தில் சுகாதார தொண்டர்களாக பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு மத்திய அரசு சுற்றுநிருபம் வெளியிடும் பட்சத்தில், நியமனம் வழங்குவதற்கு தாம் தயாராக உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே வடமாகாண சுகாதார அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவது நியாயமானது என்று குறிப்பிட்ட அவர், யுத்தகாலத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றியதாகவும் அதன்போது தொண்டர்களாக பணியாற்றியவர்களே தற்போது இங்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனவே இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்பதில் பூரண சம்மதமும் விருப்பமும் தனக்கு உள்ளதாகவும், அதற்கான முயற்சிகளைக் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்டுவருவதாகவும், தற்போதைய ஜனாதிபதி சுகாதார அமைச்சராக இருந்தபோதும் சகல விடயங்களையும் எழுத்து மூலமாக சமர்ப்பித்து இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தற்போதைய சுகாதார அமைச்சரிடமும் முழு ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளதாகவும், எழுத்து மூலமாகவும் இவர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த முறை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, வடக்கிற்கு விஜயம் செய்தபோது இதுதொடர்பாக கலந்துரையாடியதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், இதன்போது மாகாண சுகாதார அமைச்சு ஸ்ரீலங்காவில் தற்போது எந்த தொழிலாக இருந்தாலும் கா.பொ.த சாதாரண தரத்தில் 2 சி தரம் மற்றும் 4 எஸ் தர சித்தி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதாகவும், ஆகவே அந்த தகுதியுடன் உள்ளவர்களின் விபரங்களை தருமாறு கோரியிருந்ததாகவும் அவ்வாறு தரும் பட்சத்தில் அது தொடர்பில் பரிசீலிப்பதாக தெரிவித்தனர் என்றும் இன்றைய சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

You might also like