பேஸ்புக் உதவியால் விபச்சாரத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி

இந்திய தலைநகர் டெல்லியில் பேஸ்புக் மூலம் நபர் ஒருவர் கொடுத்த தகவலால் சிவப்பு விளக்குப்பகுதியில் சித்ரவதைக்குள்ளான 15 வயது சிறுமி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ஜி.பி.சாலையில் சிவப்பு விளக்கு பகுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்கு 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வலுக்கட்டாயமாக அடைத்துவைக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவதாக டெல்லி பெண்கள் ஆணையத்தின் பேஸ்புக் பக்கத்தில் நபர் ஒருவர் செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த தகவலின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பின்னர் பொலிசாரின் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று அச்சிறுமியை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அச்சிறுமி பீகாரைச் சேர்ந்தவர் என்றும், பெற்றோர்களை இழந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், தான் 11 வயதில் அத்தை வீட்டில் தங்கியிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு விபச்சாரக்கும்பலில் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

பல முறை அந்த இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போது சி.சி.டி.வி கமெரா மூலமாக கண்டறிந்து விபச்சார கும்பல் தன்னை கடுமையான சித்திரவைதைக்கு உள்ளாக்கியதாகவும் பொலிசாரிடம் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக அப்பகுதிக்கு வந்த நபர் அச்சிறுமியின் அவல நிலையை கண்டு, அங்கிருந்து தப்பிச்செல்ல உதவியுள்ளார். ஆனால், இருவரையும் பிடித்துக்கொண்ட அக்கும்பல், இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. இதனால், அந்நபர் டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவரின் பேஸ்புக் பக்கத்தில் தகவல் அளித்துள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி பொலிசார், விபச்சாரக் கும்பலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அச்சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

You might also like