முல்லைத்தீவில் வறட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்டச்செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைபற்று, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி நிலவுகிறது. இதனால் அப்பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

குடிநீர் நெருக்கடி தொடர்பாக கிடைக்கின்ற தகவல்களின்அடிப்படையில் பிரதேச சபைகள், பிரதேச செயலகங்களின் ஒழுங்குபடுத்தல்களில் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

மேலும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வசந்தபுரம், பேராறு, கற்சிலைமடு, சம்மளங்குளம், கூழாமுறிப்பு, மானுருவி, கருவேலங்கண்டல் ஆகிய பகுதிகளில் குடிநீர் நெருக்கடி காணப்படுகின்றது.

கரைதுறைபற்றில் மாமூலை கிராமம் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. துணுக்காயின் பல கிராமங்கள் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன.

இதேவேளை மாவட்டத்தில் வறட்சி நிலைமை அதிகரிக்குமானால் குடிநீர் நெருக்கடியும் கூடுதலாக உருவாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

You might also like