வித்தியாசமான திறமையுடைய யாழ். மாவட்ட இளைஞர், யுவதிகளா நீங்கள்?

13 – 29 வயதிற்குட்பட்டவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் முகமாக இரண்டாவது தடவையாகவும் போட்டி நிகழ்வொன்றை நடத்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை உரியவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ். மாவட்டக் காரியாலய உதவி இயக்குனர் ஐ.தவேந்திரன் தெரிவித்துள்ளார்.

13 வயதுக்கும் 29 வயதுக்கும் உட்பட்ட வயதினரின் திறன்களை ஊக்குவிக்கும் முகமாக நாங்கள் இரண்டாவது தடவையாக இளைஞர்கள், யுவதிகளுக்கான மாபெரும் களத்தை ஏற்படுத்திக் கொடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

உங்களிடமும் ஏனையவர்களைக் கவரும் வகையிலான வித்தியாசமான திறமைகளிருந்தால் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களிடம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும். எதிர்வரும் ஜூன் மாதம் 5ம், 6ம் திகதிகளில் இதற்கான போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிகளில் தெரிவு செய்யப்படும் பத்துப் போட்டியாளர்களுக்குத் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது. ஆகவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எமது இளைஞர், யுவதிகள் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐ.தவேந்திரன்

கடந்த ஆண்டு யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பத்துப் பேர் குறித்த போட்டிகளில் தேசிய ரீதியில் 11 இடங்களுக்குள் உள்வாங்கப்பட்டுச் சார்ள்ஸ் என்பவர் நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பரிசில்களை வென்றெடுத்தார்.

கடந்த ஆண்டு எமக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 49 சமூக அபிவிருத்தித் திட்டங்களை இளைஞர் சக்தியுடன் கிராம மட்டத்தில் மேற்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் 93 சமூக அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அதனை விடக் கடந்த ஆண்டில் இளைஞர் கழகங்கள் ஒவ்வொன்றும் வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 75 ஆயிரம் ரூபாவை வைப்பிலிட்டோம். இந்த ஆண்டு அந்த நிதியை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளோம். எனினும், அவர்கள் கழக நிதியையும் இணைத்து மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான வேலைத் திட்டமாகச் செய்து முடிக்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கியுள்ளோம். எதிர்வரும்-18 ஆம் திகதி குறித்த வேலைத் திட்டத்துக்கான இறுதித் திகதியாகும்.

ஆகவே, கிராமங்களில் உங்களுக்குத் தேவையான மிக முக்கியமான சமூக அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் வருமானம் தரக் கூடிய திட்டங்கள் எதுவாகவிருப்பினும் இளைஞர் சேவைகள் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று பிரதேச செயலக குழுவினால் எதிர்வரும்-18 ஆம் திகதி சிபாரிசு செய்யப்படும் பட்சத்தில் இளைஞர் கழகங்கள் இந்தத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குக் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இரு மடங்கு நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த-2016 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வேலைத் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தால் இந்த ஆண்டு எமது வேலைத் திட்டத்திற்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் எங்கள் வேலைத் திட்டங்களைப் பன்முகப்படுத்தியுள்ளோம் என்றார்.

இதேவேளை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ். மாவட்டக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளையும் சேர்ந்த இளைஞர், யுவதிகள் மத்தியில் தனிநடனம், குழு நடனம், புத்தாக்கம், கிராமியப் பாடல், பேச்சு, அபிநய நடனம்,சித்திரப் போட்டிகள், புகைப்பட வடிவமைப்பு, அறிவிப்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நேற்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த போட்டிகளில் இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like