இலங்கையில் முதியோர் இல்லங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள்

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் இலங்கையில் முதியோர் இல்லங்களில் தங்கியுள்ளதாகவும், இவர்கள் சுமார் 306 முதியோர் இல்லங்களில் உள்ளதாகவும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதில் ஆறு முதியோர் இல்லங்கள் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படுவதுடன், ஏனைய 300 முதியோர் இல்லங்களும் மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பிள்ளைகளே இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்த பெற்றோர்களின் எண்ணிக்கையே அதிகளவில் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளைகள் கவனிக்காமை மற்றும் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்திலும் சில பெற்றோர் இவ்வாறு முதியோர் இல்லங்களை நாடுகின்றனதாக கூறப்படுகிறது.

இதேவேளை, பிள்ளைகள் தங்களை உரிய முறையில் பராமரிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து 57 பெற்றோர் முதியோர் செயலகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர் என செயலகத்தின் பணிப்பாளர் சுமிந்த சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் இவ்வாறு பிள்ளைகளுக்கு எதிராக 57 பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 வயதையும் விட கூடியவர்களின் எண்ணிக்கை 25 இலட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like