முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

இலங்கையில் அண்மைக்காலமாக நிலவிய வறட்சியான காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அதிக வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம், இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார்.

‘மாவட்டத்தில் எமது திணைக்களத்தின் கீழ் உள்ள 40 வரையான குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சில குளங்கள் தவிர பெரும்பாலான குளங்களில் நீர்மட்டம் குறைவாகவே காணப்படுகின்றது.

இதேபோல் காலபோக நெல் செய்கையில் மானாவாரியாக செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை 50 வீதமானவை முழுமையாக அழிவடைந்திருக்கின்றது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பினை சந்தித்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் அழிவினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக முத்து ஐயன்கட்டு குளத்தின் கீழ் நெய்செய்கை, மற்றும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அழிவுகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டிருக்கின்றது.

அதேபோல் ஏனைய பகுதிகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முல்லைத்தீவு மாவட்டத்தை அதிகம் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாகப் பிரகடனப்படுத்தி, நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

You might also like