செட்டிகுளம் கல்லாறு மக்களின் காணிப்பிரச்சனைக்கு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்வு

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு கிராமம் பழமையான குடியேற்றக்கிராமமாகும். 1975 களில் இங்குள்ளவர்களுக்கு அரசாங்கத்தினால் தலா 03 ஏக்கர் வீதம் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

இவற்றிற்கான காணி அனுமதிப்பத்திரங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக இங்குள்ள மக்கள் இந்தியாவுக்கும் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது மீள்குடியேறி வருகின்றனர்.

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி எதுவும் செய்யாத நிலையில் பற்றைக்காடுகளாக இருக்கும் காணிகளை காணி உரிமையாளர்கள் துப்பரவாக்கச் சென்றபோது வனவளத்திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டுவரப்பட்டதையடுத்து சுகாதார அமைச்சர் நேற்று வவனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மீள்குடியேறும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படல் வேண்டுமென கேட்டுக்கொண்டார்

இதன்போது அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களின் விபரங்களை பிரதேச செயலாளர் உறுதிப்படுதும் பட்சத்தில் வனவளத்திணைக்களம் மேற்படி காணிகளை துப்பரவாக்குவதற்கு அனுமதிப்பதாக முடிவெட்டப்பட்டது.

You might also like