வடமாகாண சபை சுடமுடியாத துப்பாக்கி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்: மயூரன்

வடக்கு மாகாணசபைக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கி விட்டோம் என மத்திய அரசு கூறினாலும் வடக்கு மாகாணசபை சுட முடியாத துப்பாக்கி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் என வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்தார்.

வவுனியாவில் 13ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சுகாதார தொண்டர்களின் கோரிக்கை நியாயமானது. அதேவேளை இவர்களுடைய பிரச்சினையை வடக்கு மாகாணசபையின் பக்கம் திருப்புவது பொருத்தமற்ற விடயமாகும்.

இது தொடர்பாக வடக்கு சுகாதார அமைச்சரும் தகுந்த விளக்கத்தினை வழங்கியிருக்கின்றார். இத்தனை போராட்டங்கள் நடந்தும் இந்த மாகாணசபைக்கு எந்தவித அதிகாரங்களும் இல்லை. நியமனங்களை கூட வழங்க முடியாது.

ஆகவே மத்திய அரசு ஏன் இது தொடர்பில் அக்கறை கொள்ளாமல் உள்ளது என்ற கேள்வி எங்களுக்குள்ளும் உள்ளது. மத்திய அரசாங்கம் விசேட பிரேரணையை கொண்டு வந்து அனைத்து சுகாதார தொண்டர்களுக்கும் நியமனம் வழங்க வேண்டும்.

வடக்கு மாகாணசபைக்கு எல்லா அதிகாரங்களையும் வழங்கி விட்டோம் என மத்திய அரசு கூறினாலும் எல்லோருக்கும் தெரிந்த விடயம் வடக்கு மாகாணசபை என்பது சுட முடியாத துப்பாக்கி என்பது.

அவ்வாறான துப்பாக்கியையே கொடுத்து விட்ட நிலையில் எல்லோருடைய பார்வைக்கும் அது சுடுமாக தெரிந்தாலும் அது சுடாது என்பது தற்போது தான் தெரியும். ஆகவே நாம் அழுத்தத்தினை மத்திய அரசின் பக்கம் செலுத்த வேண்டும் என மயூரன் தெரிவித்தார்.

You might also like