வவுனியாவில் 10 வயது சிறுமி துஸ்பிரயோகம்! சந்தேகநபருக்கு பிணை வழங்க மறுப்பு

வவுனியாவில் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒலுமடு கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 24.05.2016 அன்று துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் இன்று 16.05.2017 வவுனியா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சந்தேகநபரை பிணையில் செல்வதற்கான அனுமதியை நீதிபதி மறுத்திருந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த சிறுமியின் தாயார்,

நெடுங்கேணி பொலிஸார் துஸ்பிரயோகம் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளவில்லை என்றும் சிறுமியின் ஆடைகள் உட்பட தடயப்பொருட்கள் எதனையும் சேகரித்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், நீதிமன்றத்தை பிழையாக வழிநடத்தும் விதமாக சிறுமி மீது சந்தேகநபர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளவில்லை. மாறாக அவரை கண்டிக்கும் விதமாக அடித்துள்ளார் என பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்து, பொலிஸாருக்கு விசாரணைகள் சரியான முறையில் நடத்தப்பட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வவுனியா சிறுவர் துஸ்பிரயோக நன்னடத்தை அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைககளை மேற்கொள்ளவில்லை என்பதுடன், சிறுவர் நன்னடத்தை அதிகாரி துஸ்பிரயோக சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கடந்த நிலையிலேயே சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்த நிலையில்,

சிறுவர் நன்னடத்தை அதிகாரியினால் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக நீதிமன்றம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் சிறுமியின் தாயார் மேலும் தெரிவித்தார்.

You might also like