நிர்ணய விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியவில்லை: வவுனியா வர்த்தக சங்கம்

நிர்ணயிக்கப்பட்ட விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக வவுனியா வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று முன்தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திலேயே வர்த்தக சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்தது.

அரிசியை கொழும்பில் 92 ரூபாய்க்கே கொள்வனவு செய்ய முடிகிறது. அங்கிருந்து இங்கு கொண்டு வரும் பாரவூர்திக் கூலி, ஏற்றி இறக்கும் கூலி, வர்த்தகருக்கான இலாபம் என்பனவற்றை வைத்தே விற்க வேண்டும். இப்படி இருக்கையில் நிர்ணய விலையான 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியவில்லை.

உள்ளூர் நெல்லினையும் பொலன்னறுவை போன்ற வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் அதிக பணம் கொடுத்து கொள்வனவு செய்கிறார்கள்.

அதனால் நாங்களும் அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை.

இதனால் கட்டுப்பாட்டு விலை தொடர்பில் ஒரு மீளாய்வு செய்யுமாறு வர்த்தக சங்கம் கேட்டுக் கொண்டது.

இதற்கு பதிலளித்த இணைத்தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிசாட்,

கட்டுப்பட்டு விலைக்கு கூடிய விலையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலைக்கு விற்க முடியும் என நினைக்கிறேன். தற்போது கூறப்பட்டுள்ள விடயம் தொடர்பில் மீள பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்

You might also like