தமிழ் தேசிய கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு வாகரையில் இடம்பெறவுள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாகரைப் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வாகரை பிள்ளையார் ஆலயத்தில் நாளை(18) காலை 09.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வின் போது முக்கிய பங்கேற்பாளராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மகளீர் அணியினர் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வுகளின் போது கூட்டு வழிபாடு, அபிஷேகப் பூஜை, நினைவுச் சுடர் ஏற்றல் என்பவற்றோடு அன்னதான நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

மேலும் குறித்த நிகழ்வுகள் தொடர்பான துண்டுபிரசுரங்களும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கட்சி உறுப்பினர்களால் பிரசுரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த துண்டு பிரசுரத்தில்,

உரிமை கேட்ட ஈழத் தமிழ் இனத்தின் மீதான உக்கிரத் தாக்குதலின் இறுதி நாள்.

ஒரு லட்சத்து நாற்பதாயிரம் எமது உறவுகளை சர்வதேசத்தின் கண் முன்னாலேயே வன்கொலை செய்து முடித்திட்ட கொடிய நாள்.

ஈழத் தமிழினம் உலகின் கையாலாகாத் தனத்தினால் துயரக் கடலிலே தூக்கி வீசப்பட்ட துன்ப நாள்.

இச் சோக தினத்தை நினைவு கூர்ந்திட, அமரர்கள் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் ஆன்ம ஈடேற்றத்துக்காய் வழிபாடாற்றிட… ஒன்று கூடுவோம் உளமாரத் துதிப்போம்!!!

என பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like