தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை! முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிவாஜி

தமிழீழ தேசிய போராட்டம் இன்னும் முடிவடையவில்லை, அது தோற்கடிக்கப்படவும் இல்லை. ஆயுதப் போராட்டமே ஓய்ந்துள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்போதே குறித்த கருத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு கடலோரம், முள்ளிவாய்க்கால் கடலோரம், நந்திக்கடலோரம் எல்லா இடங்களிலும் எமது உறவுகள் செத்து மடிந்தார்கள். ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், எமது தமிழ் மக்களை கொலை செய்தார்கள்.

மே 18ஆம் நாளாகிய இன்று, எமது தமிழ் உறவுகளை நினைத்து நாம் முன்னெடுக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை யாரும் தடைசெய்ய முடியாது.

https://youtu.be/jnCUI13f8sM

இன்று இரவு அனைத்து மக்களும் அவர்களுடைய வீடுகளில் விளக்கேற்றி உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவார்கள்.

இவ்வாறு அஞ்சலி செலுத்தினால் தக்க பாடம் கற்பிக்கப்படும், அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தார். ஆனால் நாம் அதற்கு அஞ்சப்போவதில்லை.

உங்களின் பதிலடிக்கு நாம் தயாராக உள்ளோம். எமது மக்களுக்காக நடு வீதியில் சாகத்தயாராக இருக்கின்றோம்.

எமது உறவுகளுக்கான போராட்டம் தொடரும், தாய் தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள தமிழர்களும் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவுகூருகின்றனர். இதை யாரும் தடுக்க முடியாது.

தமிழீழம் வாழும் வரை இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படும். நல்லாட்சியின் போலி நாடகம் இனியும் தொடராது. அவர்களது உண்மை முகம் உலகுக்கு தெரியவரும்” எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

You might also like