மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற தமிழின படுகொலையின் நினைவு தினம்

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் பிள்ளையார் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு தமிழரசு கட்சி வாகரை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது பிள்ளையார் ஆலயத்தில் கூட்டு வழிபாடு இடம்பெற்றதுடன், பிள்ளையாருக்கு அபிசேகப் பூசை நிகழ்வும் இன்று காலை நடத்தப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகம் ஆலயத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாளேந்திரன், ஞா.சிறீநேசன், கிழக்கு மாகாண கால்நடை அமைச்சர் கி.துரைராஜாசிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டு உயிர் நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும், மே 12ஆம் திகதியில் இருந்து இன்று வரை தமிழீழ இன அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி, வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களின் பகுதி எங்கும் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like