இரணைதீவு மக்களை சந்தித்த யாழ். ஆயர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

சொந்த இடங்களில் தம்மை மீளக்குடியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி இரணைதீவு மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த மக்களை யாழ். ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று(17) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசசெயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இரணைதீவு மக்களின் காணிகளையும், வீடுகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள நிலையில் குறித்த மக்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெயர்ந்து நாச்சிக்குடாவில் இரணைமாதா நகரில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களது சொந்தக் காணிகளை விடுவித்து தங்களது சொந்த நிலத்தில் தம்மை மீளக் குடியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த பல நாட்களாக அந்த மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை கடற்படை முகாமிற்கு முன்பாக முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தின் 17ஆவது நாளான நேற்று அந்த இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் சென்று அந்த மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

அவருடன் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் சி.பாஸ்கராவும் கலந்து கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இந்த மக்களைச் சந்திப்பதற்காக யாழ். மறை மாவட்ட ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் வருகை தந்து மக்களின் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளனர். அத்தோடு அந்த மக்களையும் ஆசீர்வதித்து பிரார்த்தனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

You might also like