முள்ளிவாய்க்காலில் நீதிமன்ற தடையுத்தரவை மீறினால் கைது செய்யப்படுவீர்கள்: பொலிஸார் அறிவிப்பு

பாதிரியார் எழில்ராஜனாலும், பொது அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கால் தேவாலயம் ஒன்றிற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்விற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் கிழக்கில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய சூழலில் பல இடங்களில் நீதிமன்ற தடையுத்தரவு பொலிஸாரால் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு ஒலிபெருக்கி மூலம் நினைவேந்தல் நிகழ்வை நடத்த வேண்டாம் என்றும் அவ்வாறு நடத்தப்பட்டால் கைதுசெய்யப்படுவீர்கள் என்றும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த இடத்தில் இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால் அங்கு கற்களில் பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால் இவ்வாறான நிகழ்வு நாட்டின் தேசிய பாதுகாப்பு, ஒருமைப்பாடு, சமாதானம் மற்றும் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like