முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சின்னம் இன்றும் அழுதது..!

முல்லைத்தீவு நகரத்தின் நுழைவாயிலாக வட்டுவாகல் பாலம் இன்றும் அனைவரையும் வரவேற்கின்றது. சுமார் 440 மீற்றர் தூரம் கொண்ட வட்டுவாகல் பாலம் வரலாற்றுத் தொன்மையான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓர் சின்னமாகும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட இறுதிகட்ட யுத்தத்தின் பின்னர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த பல்லாயிரக்கணக்காண தமிழ் மக்கள் முல்லைத்தீவு நகரை நோக்கி போர்க்காயங்களுடன் இடம் பெயர்ந்தார்கள்.

அப்பொழுது அவர்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து இடம்பெயர்வதற்கு ஒரே ஒரு தரைவழிபாதை வட்டுவாகல் பாதையாகும். மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் அந்த பாலத்தை கடந்ததே சென்றுள்ளார்கள்.

தமிழ் இனத்தின் மீது அரசாலும் அதன் படைகளாலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய மிக மோசமான படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நாள் இன்று தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் வட்டுவாகல் பாலம் கூட கண்ணீர் சிந்துவது போன்று காட்சியளித்தது.

இறுதிக்கட்டப் போரின் போது இலட்ச கணக்கான தமிழ் மக்கள் மிகக் குறுகிய வெளிக்குள் முடக்கப்பட்டு, உணவு, மருந்து உதவிகள் எதுவுமின்றி அந்தரித்து, அரசின் குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்டு கொடூரமான முறையில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதனை இன்றும், என்றும் வட்டுவாகல் பாலம் நினைவுப்படுத்தி கொண்டுதான் இருக்கும். இன்று யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்துள்ளது. ஆனாலும் வட்டுவாகல் பாலம் இன்னமும் புனரமைப்பு செய்யதாத நிலையில் ஒரு வழி பாதையாக காணப்படுகின்றது.

இதனால் போக்குவரத்து சாரதிகள் பெரும் இடையூறுகளை சந்தித்துள்ளனர்.

நாட்டில் பல இடங்களில் அபிவிருத்தி பணிகள் இடம் பெற்றுவரும் நிலையில் குறித்த பாலம் கைவிடப்படப்பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

You might also like