சகல மாகாண சபைகளின் தேர்தல்களும் ஒரே தடவையில் நடத்தப்படும்!

ஒன்பது மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தடவையில் நடத்தும் தீர்மானத்தில் அரசாங்கம் இருப்பதாக வடமத்திய மாகாண அமைச்சர் சுசில் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், மாகாண போக்குவரத்து, விளையாட்டுத் துறை மற்றும் கூட்டுறவு அமைச்சராகவும் இருந்த எஸ்.எம். ரஞ்சித் அண்மையில் தனது பதவியில் இருந்து ராஜினாமாச் செய்திருந்தார்.

அவரது வெற்றிடத்துக்கு மாகாண சபையின் மற்றோர் உறுப்பினரான சுசில் குணரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில், அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்காக 17வது திருத்தச் சட்டத்தில் சில சரத்துக்கள் நாடாளுமன்றத்தின் ஊடாக மாற்றியமைக்கப்படும் என்று சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள வடமத்திய, மத்திய, கிழக்கு மாகாணங்களின் ஆயுட்காலம் மற்றும் அடுத்த வருடம் முடிவடையவுள்ள மாகாண சபைகளின் ஆயுட்காலம் என்பனவும் எதிர்வரும் 2019ம் ஆண்டு செப்டம்பர் வரை நீடிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இது குறித்து ஊடகங்களின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்துள்ள சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, மாகாண அமைச்சர் சுசில் குணரத்தினவின் கருத்தை மறுத்துரைத்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பரில் வடமத்திய மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைந்தவுடன் அதற்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like