முகமாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பெரும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது

முகமாலை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு எங்கிருந்து?, யாரால்? யாருக்கு? நடாத்தப்பட்டது என்பது பெரும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முகமாலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவரிடம் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் முகமாலை பகுதியில் நேற்று நள்ளிரவு கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸாரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இனந்தெரியாத நபரொருவர் நான்கு தடவைகள் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பதிலுக்குப் பொலிஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸாரால் சொல்லப்படுகின்றது.

எனினும், இதன் காரணமாகப் பொலிஸாருக்கோ அல்லது பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கோ காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. வேறு நபர்களுக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

ஆகவே, எங்கிருந்து?, யாரால்? யாருக்கு? இந்தத் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது என்பது பெரும் சந்தேகத்திற்குரிய ஒன்றாகவே காணப்படுகிறது.

You might also like