பசு மாடு உதைத்ததில் பெண் ஒருவர் பலி! யாழில் சம்பவம்

பசு மாட்டில் பால் கறந்து கொண்டிருந்த வேளையில் பசுமாடு எகிறி உதைத்தில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் யாழ். மானிப்பாய்ப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மானிப்பாய் பொன்னாலை வீதியைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயாரான ரவி விக்கினேஸ்வரி (வயது-46) என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த குடும்பத்தினர் பசுமாடொன்றைக் கொள்முதல் செய்திருந்தனர். அந்தப் பசு அண்மையில் கன்றொன்றினை ஈன்றிருந்தது.

உயிரிழந்த குடும்பப் பெண்ணே வழமையாகப் பால் கறந்து வருகிறார். வழமையாகப் பசுவின் காலைக் கட்டி விட்டுப் பால் கறந்து வரும் அவர், நேற்று வழமைக்கு மாறாகக் காலைக் கட்டாது பால் கறந்துள்ளார்.

இதனால் பால் கறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் எகிறிய பசு மாடு, குறித்த பெண்ணில் நெஞ்சிலும், தலையிலும் பலமாக உதைத்து விழுத்தியது.

இதனால் மூர்ச்சையுற்றுத் தரையில் விழுந்த பெண்ணை அவரது பிள்ளைகள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.

எனினும், குறித்த பெண்மணியின் உடலைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மானிப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like