வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் அருட்தந்தை மீது மீண்டும் மூன்று மணிநேரம் விசாரணை

முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு முள்ளியவாய்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்தில் போரில் இறந்த 500 பொது மக்கள் நினைவாக நினைவுக்கற்களை பதிக்க ஏற்பாடு செய்ய சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளார் மீது மீண்டும் மூன்று மணிநேர கடும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இன்று அவரை வருமாறு அழைத்த பொலிசார் நினைவுப் படிமங்கள் யாருடையவை, அவர்கள் எவ்வாறு இறந்தார்கள், அதில் விடுதலைப்புலிகளின் பெயர்கள் இருந்தனவா என்ற கோணத்தில் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அந்த நினைவுப் படிமங்களை செய்த சிற்பச்சாரியாரையும் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அருட்தந்தை சட்டத்தரணியின் உதவியடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு சென்று வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்.

இதேவேளை, கடந்த 17 ஆம் திகதி இரவு 8 மணிக்கு முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை எழில் ராஜன் விசாரணையின் பின் இரவு 9.30இற்கு விடுவிக்கப்பட்டமையும், படிமக்கற்களை நடுவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை உத்தரவைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like