வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வடமாகாண வைத்தியர்கள்

எதிர்வரும் 22 ஆம் திகதி அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மாணவர் அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.

அதேவேளை புது கடையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை நோக்கி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டத்தில் வட மாகாண வைத்தியர்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

  1. சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் கைது செய்தமை,
  2. இலங்கை மருத்துவ சபை மீது மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை,
  3. சைட்டம் மருத்துவ கல்லூரியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சம்பந்தபட்ட சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை முடிவடைந்த பின்னரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கும்,
  4. தொழிற்சங்க நடவடிக்கைகளையும், அதன் தலைமையையும் நசுக்கும் முயற்சியில்அரசாங்கம் ஈடுபட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்தும்,
  5. சைட்டம் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு வழங்கியதற்காக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுக்காமை.

மேலும், எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஏனைய அனைத்து தொழிற்சங்கத்தினர் உதவியுடன் கால வரையறை இன்றிய போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like