கிளிநொச்சியில் ஜனாதிபதி நிலமெஹவர மக்கள் சேவையின் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் நடமாடும் சேவை

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை கிளிநொச்சி கண்டாவளை தர்மபுரம் பாடசாலையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன முதன்மை அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நடமாடும் சேவையில்,

தேசிய அடையாள அட்டை, பிறப்பு, விவாக, உத்தேச வயது சான்றிதழ்கள், வாகனசாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ அறிக்கை, பரீட்சை நடத்துததல் மற்றும் மோட்டார் வாகனத் திணைக்களத்தின் ஏனைய சேவைகள் போன்றன வழங்கப்பட்டன.

மேலும் முதியோர் அடையாள அட்டை, சிறுநீரக நோய் புற்றுநோய், தலசீமியா, தொழுநோய், காசநோய் ஆகியவற்றுக்கான நோய்க் கொடுப்பனவு விண்ணப்பம், தற்செயல் நிவாரணக் கொடுப்பனவு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர இலவச மூக்குக்கண்ணாடி வழங்கல், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கடன் தொடர்பான ஆலோசனை, முதியோர் அடையாள அட்டை, வங்கிக்கடன் சேவை, பொதுவான வைத்திய சேவைகள், காணி உரிமை சம்பந்தமான பிரச்சினைகள், காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் போன்றனவும்,

வனவளத் திணைக்களம், தொடர்பான காணிப்பிரச்சினைகளை தீர்த்தல், சிறுதொழில் தொடங்குவது தொடர்பாக அறிவுரை, தனியார் துறையில் தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தலும் சுயதொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்தல், மின்சாரசபை தொடர்பான பிரச்சினைகள், வங்கி அலுவல்கள், சுயதொழில், பொலிஸ் திணைக்களம் சார்ந்த சேவைகளும் இதன்போது வழங்கப்பட்டிருந்தது.

மேலும் பிரதேசசபை சார்ந்த சேவைகள், சிறுவர் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் வீதி தொடர்பான பிரச்சினைகள், புனர்வாழ்வு போன்ற இன்னும் பல சேவைகள் வழங்கப்படவுள்ளன. இந்நடமாடும் சேவை தேசிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நடமாடும் சேவை நிகழ்வில், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கண்டாவளை பிரதேச செயலாலளர் த.முகுந்தன், மற்றும் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டதோடு கண்டாவளை பிரதேசத்தை சேர்ந்த பெருமளவு மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like