கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் பொலிஸாரால் கைது

கிளிநொச்சி கல்லாறு காட்டுப்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேரை இன்று(21) தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிக நீண்ட காலமாக கிளிநொச்சி கல்லாறு காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மணல் அகழ்வு மற்றும் வியாபாரம் குறித்து கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தருமபுரம் பொலிஸார் மற்றும் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் மூலம் சந்தேக நபர்களை கைது செய்ததுடன், மணல் ஏற்றிச் சென்ற வாகனங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கல்லாறு காட்டுப்பகுதியில் இருந்து பிரமந்தனாறு காட்டுப்பகுதியினை வந்தடையும் ஆற்றில் இருந்து நீண்ட காலமாக சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகள் நிர்மாணிப்பதற்கு என தெரிவித்து நீண்டகாலமாக மணல் வியாபாரம் நடைபெற்று வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் உயர் அதிகாரி தருமபுரம் பொலிஸாருக்கு கட்டளை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தருமபுரம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like