புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கின் பரிதாப நிலை!

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த விசாரணையை கொழும்பிலா, யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த விசாரணைகள் இரண்டு வருடங்களைக் கடந்தும் மேலும் தாமதமடைந்துள்ளன.

கடந்த 2015ல் புங்குடுதீவில் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கை மூன்று நீதிபதிகளைக் கொண்ட ட்ரயல் அட்பார் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர்களான ஹெய்யந்துடுவ, ஆச்சல வேங்கைப்புலி, சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரும் இந்த ட்ரயல் அட்பார் விசாரணையை கொழும்பில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்தி நிலையில் இந்த படுகொலை வழக்கு விசாரணைகளை யாழ்ப்பாணத்திலேயே நடத்த வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கின் 10 எதிரிகளுக்கும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 41 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 23 சாட்சிகளும் யாழ்.தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்களாவார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் தமிழ் பேசும் நீதிபதிகள் முன்னிலையில் யாழ்ப்பாணத்திலேயே நடைபெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் வடக்கு மாகாணத்தில் இளஞ்செழியன், இராமநாதன் கண்ணன், மனாப், மகேந்திரன், பிரேமசங்கர் ஆகிய ஐந்து மேல்நீதிமன்ற நீதிபதிகள் பதவி வகிக்கின்றனர்.

எனவே இவர்களில் மூவரை நியமித்து குறித்த படுகொலை வழக்கு விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

எனவே இந்த வழக்கு தொடர்பில் இன்னமும் முடிவுகள் எடுக்கப்படாமல் இழுபற் நிலை தொடர்வதால் விசாரணைகள் தாமதமடைந்துள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.

You might also like