யாழில் குழுக்களிடையே மோதல் மூவர் படுகாயம்! குடிசை தீக்கிரை

வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் கிழக்கு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குடிசை ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு பகுதியினருக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதில் கத்திக்குத்து மற்றும் போத்தல் குத்துக்கு இலக்காகி மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இம்மோதல் சம்பவத்தில் நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த பத்மநாதன் கருணாநிதி (வயது36), மரிய அமலதாசன் விமலதாசன் (வயது28) மற்றும் நாகர்கோவில் மேற்கைச் சேர்ந்த யோசப்யோன்சன் பகிரதன் (வயது 29) ஆகிய மூவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

மேலும் இச்சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள குடிசை ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

You might also like