வவுனியாவில் பல கிராமங்கள் மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் ஜி.ரி.லிங்கநாதன்

வவுனியா மாவட்டத்திலுள்ள பல கிராமங்கள் பிரதேச செயலகத்திலோ அல்லது மாவட்ட செயலகத்திலோ பதிவு செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றன.எனவே அவற்றை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்ற கோரிக்கையினை வடமாகாண சபை உறுப்பினர் கெளரவ ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

கடந்த 15.05.2017ந் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே.கே.மஸ்தான் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு  கூட்டத்திலேயே வடமாகாண சபை உறுப்பினர் கெளரவ ஜி.ரி.லிங்கநாதன் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் கெளரவ ஜி.ரி.லிங்கநாதன் கருத்துக்கு இணைத்தலைவர்கள் இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபருக்கும் பணிப்புரை வழங்கினார்கள்

மேலும் அன்றைய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பல்வேறு விடயங்களை முன்வைத்தார் அவை பின்வருமாறு,

1. வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி மற்றும் செட்டிகுளம் ஆகிய பிரதேசங்களில் காட்டு யானைகள் ஊரிற்குள் புகுவதனால் மக்கள் உயிர் அழிவு மற்றும் சொத்து அழிவு ஆகியவற்றை தினசரி எதிர்நோக்கி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்த விடயமே எனவே அதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அலுவலகங்களினை செட்டிகுளம் மற்றும் நெடுங்கேணியில் அமைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளல் வேண்டும். ஏனெனில் இவ் அலுவலகம் பிரதேசங்களில் அமைக்கப்படும் போது காட்டு யானைகளின் அச்சுறுத்தல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மக்கள் இத்திணைக்களத்தினுடாக உதவியினை உடனடியாக பெற்று கொள்ள கூடியதாக இருக்கும்.மேலும் காட்டு யானைகள், மக்கள் வாழும் கிராமங்களில் உள்நுழைகின்ற வழித்தடங்களினை ஆராய்ந்து அவற்றிற்கு பாதுகாப்பு வேலி அமைப்பதோடு மட்டுமல்லாது காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுகின்ற இடங்களில் வாழுகின்ற மக்களிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் வேண்டும்.

2. வவுனியா கற்குளம் ஆச்சிபுரம் ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களில் சிலருக்கு வீட்டுத்திட்ட வசதி கிடைக்கப்பெற்ற அதேவேளை அக்கிராமத்தில் வாழும் ஏனைய மக்களிற்கு அவ்வசதி கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.எனவே தேசிய வீடமைப்பு அதிகாரசபை மூலம் அவர்களிற்குரிய வீட்டுத்திட்ட வசதியினை பெற்று கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளல். இதன்போது ஏனைய மக்களுக்கான வீட்டுத்திட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கும் என தீர்மானிக்கப்பட்டது.

3. தேசிய வீடமைப்பு அதிகாரசபையினர் தமது வீட்டுத்திட்ட பயனாளிகளினை உடனடியாக வீடுகளினை அமைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர் இந்துமக்கள் தமது பஞ்சாங்க நாட்காட்டியின் அடிப்படையிலே சுபகாரியங்களுக்குரிய நாளினை குறிப்பது வழக்கமாகும் அந்த வகையில் தற்போது காண்டாவனம் எனப்படும் கலப்பகுதியாக காணப்படுவதால் இவர்கள் இந்நாட்களில் எவ்வித சுப காரியங்களினையும் மேற்கொள்வதில்லை.எனவே இவ் வீட்டுத்திட்ட பணியினை ஆரம்பிப்பதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்குவதற்கு அனுமதி அளித்தல் வேண்டும். இவ் விடயமாக வீடமைப்பு அதிகார சபையினால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் மூன்று வார கால அவகாசம் வழங்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டது.

4. வவுனியா வடக்கு வெடிவைத்த கல்லு கிராம சேவையாளர் பிரிவில் இரண்டு சிங்கள கிராமங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றது. எனவே இவ் இரு கிராமங்களினையும் இவ் வெடிவைத்த கல்லும் கிராமசேவையாளர் பிரிவில் இருந்து விடுத்து சிங்கள பிரதேச செயலகத்தின் ஏதாவதொரு கிராம சேவையாளர் பிரிவில் இணைத்து கொள்ள வேண்டும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் நடவடிக்கையின் போது இவ் இரு கிராமங்களினையும் சிங்கள பிரதேச செயலகத்தில் இணைப்பதற்கு வவுனியா மாவட்ட சிங்கள மக்கள் பிரதிநிதிகள் சம்மதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக வவுனியா வடக்கு சிங்கள கிராமங்களை வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் இணைத்து கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

You might also like