யாழ் கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கு திசை மாறுகின்றதா ?

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் கர்ப்பிணித் தாயொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எல்.எம் றியாழ் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் இருவரையும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது ,யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக மன்றில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் கொலை இடம்பெற்ற சமயத்தில் மருதனார்மடம் பகுதியில் நின்றதாகவும் அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் கண்காணிப்பு கமராவை பரிசோதிப்பதன் மூலம் அதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் சில மாதங்களுக்கு முன்னர் சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரையில் பொலிசார் கண்காணிப்பு கமரா பதிவு தொடர்பில் மன்றில் அறிக்கை எதனையும் சமர்ப்பிக்கவில்லை என்பதனையும் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தனக்கு சில தகவல்கள் தெரியும் அதனை நீதிமன்றில் தெரிவிக்க வேண்டுமாயின் ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் ஜெகதீஸ்வரன் என்பவர் பேரம் பேசியதை தான் கேட்டேன் என பிறிதொரு குற்றத்திற்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மகிந்தன் என்பவர் வாக்கு மூலம் அளித்து இருந்தார்.

ஆனால் ஜெகதீஸ்வரன் பேரம் பேசியதாக கூறப்படும் காலப்பகுதியில் ஜெகதீஸ்வரன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கவில்லை என தெரியவருகின்றது.

சிறையில் ஜெகதீஸ்வரன் இல்லாத கால பகுதியில் சிறைக்குள் பேரம் பேசப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது வழக்கினை திசை மாற்றும் நடவடிக்கையாக இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது என மன்றில் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இது தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு நீதிவான் ஊர்காவற்துறை பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

You might also like