செங்கல் வாடிக்கு தொழிலுக்கு சென்றவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு

வந்தாறுமூலையில் இருந்து அம்பாறைக்கு செங்கல் வாடிக்கு தொழிலுக்கு சென்றவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்வமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு ஆலையடி வீதியிலுள்ள தம்பிராசா சிவநாதன் (வயது 39) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மடுகெல்ல பகுதியில் கடந்த சனிக்கிழமை தனது குடும்ப வறுமை காரணமாக தொழிலுக்காக சென்றிருந்த நிலையில், நேற்று இரவு செங்கல் உற்பத்தி செய்யும் வாடியிலுள்ளவர்கள் மதுபோதையில் இருந்தமையினால் அவர்களிடத்தில் ஏற்பட்ட தர்க்கத்தில் இடம்பெற்ற கத்தி குத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அம்பாறை தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.
நேற்று இரவு வேளையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் காரணமாக உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக அம்பாறை பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபாவனை அதிகரித்துவருகின்ற நிலையில் போதையின் காரணமாக இவ்வாறான பல அசம்பாவிதங்களினால் உயிரிழப்புக்களும் மட்டக்களப்பில் அன்றாடம் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.