விசுவமடு இராணுவ முகாமில் வேலை செய்தவருக்கு என்ன நடந்தது? அகழ்வில் ஈடுபட்ட குற்றத் தடுப்புப் பிரிவு

விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வேலை செய்து வந்த நபர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வறக்காபொல பகுதியை சேர்ந்த நிமல் சேனாரத்ன என்ற நபர் ஒருவர் 2009 ஆண்டின் பிற்பகுதியில் விஸ்வமடுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் வேலை செய்து வந்ததுள்ளார்.

எனினும், கடந்த 2010ஆம் ஆண்டு இரண்டாம் மாதத்தில் இருந்து அவர் இன்னமும் வீடு வந்து சேரவில்லை என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக அவரின் மனைவியால் வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையிலே மன்றின் அனுமதியுடன் நீதிபதி எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் இவ் அகழ்வுப்பணி நடைபெற்றுள்ளது.

குறித்த நபர் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோய்வாய்ப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் மீண்டும் வரவில்லை எனவும் இராணுவத்தரப்பு கூறியுள்ளது.

எனினும் நபரை கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரிலையே குறித்த அகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஆனால், அகழ்வானது  நான்காவது தடவையாக நடைபெற்றுள்ள போதும் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like