கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் வெடிபொருட்கள் அகற்றுவதில் பாரிய சவால்

கிளிநொச்சி – முகமாலைப் பகுதியில் வெடிபொருட்களை அகற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொள்வதாக கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர் இதுவரை மீள் குடியமர்விற்கு அனுமதிக்கப்படாத பகுதியாகவும் அதிகளவு வெடிபொருள், ஆபத்தான பகுதியாக முகமாலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

கடந்த கால யுத்தத்தின் போது அதிளவான வெடிபொருட்கள் புதைக்கப்பட்டதாகவும், இரு தரப்புக்களும் தொடர்ச்சியாக யுத்தத்தில் ஈடுபட்டதாகவும் காணப்படும் இந்த பகுதியில் வகை தொகையின்றி வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட காலம் காத்திருந்து உயிர்களை காவு கொள்ளும் ஆபத்தான பகுதியாகவும் காணப்படுகின்றது.

அத்துடன், 2000ம் ஆண்டு காலப் பகுதியிலும் அதன் பின்னர் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2008ம் டிசம்பர் மாதம் வரை யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் பரஸ்பரம் மோதிக்கொண்ட பகுதியாக காணப்படும் கிளிநொச்சி, கிளாலி முதல் யாழ் வடமராட்சி கிழக்கு, நாகர் கோவில் வரைக்குமான ஏறத்தாள ஏழு கிலோ மீற்றர் நீளமான பகுதிகளில் அதிகளவான நிலக்கண்ணி வெடிகளும் ஆபத்தான வெடிபொருட்களும் புதைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தினமும் இரு தரப்புக்களும் மோதிக்கொள்ளும் இந்த பகுதிகளின் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட போதும் பல இடங்கள் இன்றும் ஆபத்தானதாகவே காணப்படுகின்றது.

இது தொடர்பில் டாஸ் நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் கருத்துத் தெரிக்கையில்,

குறித்த பகுதியில் அதிகளவான நிலக்கண்ணி வெடிகள், வாகன கண்ணி வெடிகள் என்பன மிகவும் ஆபத்தான நிலையில் புதைக்கப்பட்டுள்ளன.

வெடிக்காத நிலையில் காணப்படுகின்ற வெடிபொருட்களும் அதிகளவில் உள்ளன. அத்துடன் இராணுவ மண் அணைகள் கைவிடப்பட்ட காவலரண்களுக்கு அருகில் மிக ஆபத்தான வகையில் இந்த வெடிபொருட்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இதனை அகற்றுவதில் பாரிய சவால்கள் காணப்படுகின்றதாகவும் இவ்வாறான பகுதிகளுக்குள் பொதுமக்கள் பலர் நுழைந்து உயிரிழப்புக்கள் மற்றும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் டாஸ் நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like