காதலித்த பெண்ணை கவர்ந்து சென்று குடும்பம் நடத்திய நபருக்கு நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு

காதலித்த பெண்ணை கவர்ந்து சென்று அவருடன் குடும்பம் நடத்திய ஒருவருக்கு 12 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதி குறித்த குற்றவாளிக்கு,

“முதலாவது குற்றமான ஆட்கவர்தல் குற்றத்திற்காக 05 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 5 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்ட தவறின் ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறேன்.

இரண்டாவது குற்றமான பாலியல் வன்புணர்வு குற்றத்திற்கு 05 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 05 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் கட்ட தவறின் ஒரு வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் அதனை கட்ட தவறின் 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 வயதுக்கு குறைவான பெண் பிள்ளை ஒருவரை அவரின் சட்ட ரீதியான பாதுகாவலர்களிடம் இருந்து கவர்ந்து சென்றமை மற்றும் அக்கால பகுதியில் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் குறித்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

“அந்த காலப் பகுதியில் இவருக்கு 24 வயது அந்த பெண் பிள்ளை மீது காதல் கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் அந்த பெண்ணின் சுய விருப்பத்தின் பேரில் தான் அவரை வீட்டை விட்டு அழைத்து சென்று வாழ்ந்துள்ளனர். அப்போது அந்த பெண் 16 வயதை தாண்டி விட்டார் என்றே எண்ணி இருந்தார். அதற்காக மன்னிப்பு கோருகின்றார்.” என எதிரி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டார்.

மேலும், “அந்த பெண் 18 வயதை தாண்டியதும் அவரை சட்ட ரீதியாக திருமணம் செய்யவே எண்ணி இருந்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் வேறு நபர்களை திருமணம் செய்து தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர் தற்போது இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாக உள்ளார். எனவே இவரின் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு இவருக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், “எனது மகள் தற்போது திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். தற்போது அவர் இந்த வழக்கில் முன்னிலையாகி சாட்சியம் அளிக்க விரும்பவில்லை. அவர் தற்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றார். அந்த வாழ்க்கை சீரழிய கூடாது” என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும், இதில் பாதிக்கப்பட்ட பெண் நஷ்ட ஈட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள விரும்பாத காரணத்தினால் அதனை அரச நிதியில் சேர்க்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டார்.

You might also like