வித்தியா படுகொலை வழக்கு! 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 9 பேரும் தற்போது எதிரி களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

ஆகவே தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந் நேற்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் யூன் மாதம் 12ம் திகதி வரை அவர்கள் 9 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கில் பிணைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரினால் கடந்த வருடம் யாழ்.மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டு சந்தேக நபர்களின் விளக்கமறியல் ஒரு வருடம் நீடிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஒரு மனு சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு அதன் விசாரணை மன்றில் நேற்றைய தினம் எடுத்துக்கொள்ள ப்பட்டது.

அதன்போதே அரச சட்டவாதி மேற்படி தெரிவித்திருந்தார். அவர் தனது விண்ணப்பத்தில் மேலும் தெரிவிக்கையில்,

வித்தியா கொலை வழக்கின் பிணை விண்ணப்பத்தின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் எதிரிகளாக இனங்கண்டு குற்றப்பகிர்வு பத்திரம் மற்றும் அவை தொடர்பான ஆவணங்கள் கட ந்த 12ம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நடத்துவதற்கு நியாயாதிக்கம் யாழ்.மேல் நீதிமன்றுக்கு உரியது என்ற அடிப்படையில் குற்றப்பகிர்வு பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய மற்றும் பிரதி மன்றாதிபதி குமாரரட்ணம் ஆகியோர் கட ந்த 15ம் திகதி பிரதம நீதியரசர் அலுவலக த்துக்கு நேரடியாக சென்று சந்தித்து ரயல் அட்பார் (நீதாய விளக்கம்) முறையில் குறித்த வழக்கு நடைபெற வேண்டும் என்றும் அதற்கு 3 நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

பிணைச்சட்டத்தின் படி இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் 2 வருட காலம் மாத்திரம் விளக்கமறியலில் வைக்க முடியும் என்றுள்ளது.

ஆனால் எதிரிகள் கொலை நடைபெற்ற அடுத்தடுத்த நாட்களில் கைது செய்யப்பட்டு 2 வருட விளக்கமறியல் காலத்தை கடந்து விட்டார்கள்.

அதனால் பிணை சட்டம் செயலிழந்துள்ளது. ஆனால் குற்றவியல் நடவடிக்கை கோவை பிரிவு 450 உப பிரிவு 6 க் அமைய ஒரு நீதாய விளக்கம் முறையில் வழக்கின் விசாரணைகள் நடைபெற வேண்டும் என சட்டமாஅதிபர் தெரிவித்து அதற்கு 3 நீதிபதிகளை கோரியுள்ள நிலையில் அல்லது குற்றப்பகிர்வு பத்திரம் யாழ்.மேல் நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் நீதாய விளக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிரிகளின் பிணை சட்டமா அதிகாரியின் அனுமதியுடன் விடுவிக்கப்பட முடியும் என சட்ட ஏற்பாடு உள்ளது.

ஆகவே 9 சந்தேக நபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்றில் விண்ணப்பம் செய்தார்.

மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில், இரண்டு வருடங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் விசாரணைகள் ரயல் அட்பார் முறையில் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நடைபெறும்.

அதனடிப்படையில் குறித்த எதிரிகளை எதிர்வரும் யூன் மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதுடன் ரயல் அட்பார் முறைமூல விசாரணைக்கு எதிரிகள் அழைக்கப்படும் நேரத்தில் அவர்களை குறித்த நீதிமன்றில் ஆஜராக்குமாறும் சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, விசாரணைகள் ரயல் அட்பார் (நீதாய விளக்கம்) முறையில் எதிர்வரும் யூலை மாதளவில் யாழ்.மேல் நீதிமன்றில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த ரயல் அட்பார் முறையில் வழக்கு விசாரணைகளை மேற்கொள்வதற்கு பிரதம நீதியரசரால் மூன்று நீதிபதிகள் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோர் நீதிபதிகளாக இருந்து குறித்த வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

You might also like