வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் விழிப்புணர்வுப் போட்டிகள்

சமூகசேவை அமைச்சின் கீழ் உள்ள முதியோர் செயலகம் அகில இலங்கை ரீதியில் முதியோர் விழிப்புணர்வுச் செயற்பாடாக பாடசாலை மாணவரிடையே கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம் மற்றும் சிறுகதைப் போட்டிகளை நடத்தவுள்ளது.

இதன் ஆரம்ப செயற்பாடாக வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இன்று (24) நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் செ.ஸ்ரீநிவாஸன் மாணவர்கள் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தியுள்ளார்.

இதில் மாணவர்கள் மூத்தோரின் வழி நடத்தலின் அவசியம், முதியோரின் விழுமியங்கள் பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, கதை, ஓவியம் போன்ற போட்டிகளை நடத்தி தேசிய ரீதியிலான பரிசுகளை வழங்குதல் பற்றியும் மாணவர்களிடையே தெளிவுபடுத்தப்பட்டது.

இதேவேளை, முதியோர் தேசிய செயலகம் மூலம் அனுப்பப்பட்ட சுமார் 200 போட்டிக்கான அப்பியாசப் புத்தகங்களை மாவட்ட முதியோர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் தனுசியா பாலேந்திரன் அதிபரிடம் கையளித்துள்ளார்.

அத்துடன், போட்டிகளை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் அதிபர் மூலம் ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் மாவட்ட செயலக சமூகசேவை உத்தியோகஸ்தர் இராஜசேகர், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கி.வசந்தரூபன், பாலேந்திரன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், முதியோர் விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைப்பதற்கு மிகச்சிறந்த போட்டியாக இது அமையும் என அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like