முல்லைத்தீவில் மூன்று கோடியே 70 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு வேலைத்திட்டங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஆறு கமநலசேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மூன்று கோடி 70 இலட்சம் ரூபா செலவில் பத்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மத்திய கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சிறிய குளங்கள் புனரமைப்பு, நீர் விநியோக வாய்க்கால்கள் புனரமைப்பு போன்ற பத்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிலையில் முள்ளியவளை கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட கஞ்சுரமோட்டை குளத்தினுடைய புனரமைப்பு வேலை, அளம்பில் கமநல சேவை நிலையத்தின் கீழ் அளம்பில் குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால் புனரமைப்பு, பாண்டியன்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள தேவிகுளத்தின் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட கரம்பைக் குளத்தின் புனரமைப்பு வேலைகள், ஒலுமடு கமநலசேவை நிலையத்தின் கீழ் புலுமச்சிநாதகுளத்தின் புனரமைப்பு போன்றனவும் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை தச்சடம்பன் நீர்ப்பாசன வாய்க்கால் புனரமைப்பு வேலைகள், ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்திற்குட்பட்ட கோடாரிக்கல்க்குளம், பெரிய இத்திமடுக்குளம், இடிதாங்கிக்குளம் மற்றும் தவசிகுளத்தின் புனரமைப்பு வேலைகள் போன்றனவும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like