ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்! பொதுபல சேனா பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம்

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதருமாறும் பொதுபல சேனா அமைப்பு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக நம்பகமான தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

மாற்றுமத வணக்கத்தலம் ஒன்றின் மீதான தாக்குதல் அல்லது மாற்றுமதத்தவர்கள் செறிந்து வாழும் பகுதியொன்றில் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தி அதன் ஊடாக அவரது உயிருக்கு ஆபத்துவிளைவிக்கும் திட்டமொன்று தீட்டப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதற்காக பெரும்குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பாதாள உலக அங்கத்தவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் இருக்கும் அவ்வாறான பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களைப் பயன்படுத்தி ஞானசார தேரர் இரவு நேரப் பயணங்களை மேற்கொள்ளும் வேளையில் அல்லது மாற்றுமதத்தவர் வாழும் பிரதேசமொன்றில் பதற்ற நிலையைத் தோற்றுவித்து அதன் ஊடாகவே குறித்த சதித்திட்டத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இனக்கலவரத்தை முன்னிலைப்படுத்தி ஞானசார தேரரின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை நியாயப்படுத்தவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் ஞானசார தேரருக்கு உரிய பாதுகாப்பு வழங்காது அவரது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிடின் அதற்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் பொதுபல சேனா பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like