சொன்னதை செய்வாரா ஜனாதிபதி…? தாயின் நம்பிக்கை காப்பாற்றப்படுமா?

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டால், கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

கடந்த 20ஆம் திகதி சம்பூர் வைத்தியசாலையை திறந்து வைக்கும் போது ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி வழங்கிய அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பில் தற்போது வரை கிடைத்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆராய்வதற்காக குழு ஒன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி, சம்பூரில் வைத்து கூறியிருந்தார்.

2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவி என்னுடைய புகைப்படத்தில் காட்சியளித்தார். அந்த மாணவி காணாமல் போயுள்ளதாக ஊடகங்களில் புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது.

இது அரசியல் சூழ்ச்சியாகும். காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்கு நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவு வழங்குவேன் என ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவர் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்து தருமாறு ஒன்பது வருடங்களாக போராடும் திருகோணமலை தாய்மார்கள் சங்கத்தின் தலைவி செபஸ்தியன் தேவி என்பவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தனது மகன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் தனக்கு தெரியாது. எனினும் கடத்தி சென்ற நபர்களின் பெயர் மற்றும் விபரங்கள் தனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.

“எனது மகனின் பெயர் செபஸ்தியன் ரேகன். 2008.03.19 ஆம் திகதி பிள்ளையான் குழுவை சேர்ந்த நாதன் மற்றும் நகுலேஸ் என இருவர் அவரை கடத்தி சென்றனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து நாதன் எனக்கு அழைப்பொன்றை மேற்கொண்டு ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்கினால் மகனை விடுவிப்பதாக தெரிவித்தார். பின்னர் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தை நான் நாதனின் கையில் கொடுத்தேன். எனினும் எனது மகனை விடுவிக்கவில்லை.

திருகோணமலை நகரத்திற்கு அருகில் உள்ள சுமேதகம, பெரிய கடை என்ற இடத்தில் நான் தற்போதும் நாதனை சந்தித்துள்ளேன். நான் இந்த தகவல்களை நல்லிணக்கம் தொடர்பிலான அதிகாரிகளிடம் வழங்கியுள்ளேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செபஸ்தியன் தேவி வழங்கிய தகவல்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை நிறைவேற்றிய கடப்பாடு ஜனாதிபதிக்கு உள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like