25ஆவது நாளாகவும் தொடரும் இரணைதீவு மக்களின் கவனயீர்ப்புப் போராட்டம்

எங்கள் மண்ணில் மீண்டும் சென்று நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்தித்தாருங்கள் என கோரி இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம் 25ஆவது நாளாகவும் இன்று தொடர்ந்து வருகின்றது.

இரணைதீவுப் பகுதியில் கடந்த 1992ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் யுத்தம் நிறைவு பெற்று எட்டு வருடங்களாகியும் அவர்களது சொந்த நிலத்தில் மீள்குடியேறவோ அல்லது அங்கு சென்று தொழில் செய்வதற்கோ இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது முழங்காவில் இரணைமாதா நகரில் தங்கியுள்ள இரணைதீவு மக்கள் தங்களை சொந்த இடத்தில் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள்.

எங்கள் மண்ணில் நாங்கள் இருப்போமாக இருந்தால் சீமாட்டியாக இருப்போம், இப்போது பணமின்றி கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றோம்.

எங்கள் மண்ணில் இருந்த சுகம் இல்லை. இப்போது வருத்தங்களால் துன்பப்படுகின்றோம். நாங்கள் எந்தக் குறையுமின்றி வாழ்ந்தோம்.

மேலும், தொழில் வளங்கள் எவ்வளவோ இருந்தது. செல்வம் செழிக்கும் எங்கள் மண்ணை எங்களிடம் தாருங்கள் என இரணைதீவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

You might also like