மருமகனின் மரணத்தை தாங்கிக் கொள்ளமுடியாமல் உயிரிழந்த அத்தை

மருமகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், அவரது அத்தை உயிரிழந்த சம்பவம் ஒன்று கலகமுவ, மிகலேவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மிகலேவ, பொதானேகத விலாசத்தை சேர்ந்த எம்.டி.குசுமாவத்தி என்ற 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயதுடைய மருமகன் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் ஒன்றும் அறிவிக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அத்தையை இறுதி சடங்கு இடம்பெறும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், வீதியில் கட்டப்பட்டிருந்த வெள்ளைக் கொடியை பார்த்த அவரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டடுள்ளது.

குறித்த வீட்டிற்கு சென்ற பின்னர் உயிரிழந்த மருமகனின் சகோதரர் அத்தையை கட்டிபிடித்து அழும் போதும் அவர் சுயநினைவின்றி அவ்விடத்திலேயே விழுந்துள்ளார்.

விழுந்த அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருமகனுடன் அதிக அன்பாக இருந்த அத்தை அவரது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரிழந்து விட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் இருவரது உடல்களும் ஒரே வீட்டில் வைக்கப்பட்டு இறுதி அஞ்சலி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like