ஞானசார தேரருக்கு ஆதரவாக பிக்குகளை அணிதிரட்டும் சிங்கலே அமைப்பு

பொலிசாரினால் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ள ஞானசார தேரருக்கு ஆதரவாக பிக்குகள் அணிதிரள வேண்டுமென்று சிங்கலே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரரைக்கைது செய்வதற்கு பொலிசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக வியாழக்கிழமை முன்னிரவில் ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடவடிக்கையொன்றும் மேற்கொள்ளப்பட்டது.

எனினும் ஞானசார தேரர் மறைந்திருக்கும் இடத்தை பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஞானசார தேரரின் தேசிய மகத்துவமிக்க பணிகளுக்கு நன்றியறிதல்களையும், ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் மகாசங்கத்தினர் (பிக்குகள்) அணிதிரள வேண்டுமென்று சிங்கலே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்காக 26ம் திகதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணியளவில் மகாசங்கத்தினர் ராஜகிரிய, நாவல வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரைக்கு வருகை தருமாறும் சிங்கலே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like