பூர்வீக நிலத்தை மீட்டுதருமாறு தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மக்கள் கோரிக்கை

ஆட்சியில் இருந்த போது தொழில் செய்யும் உரிமையை பெற்றுத்தராதவர்கள் இப்போது பலரை குறை கூறியே எம்மிடம் வருகின்றனர். எல்லோரும் இணைந்து எங்கள் ஊரை மீட்டுத்தாருங்கள் என இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரணைதீவில் சென்று குடியேறுவதற்கும், அங்கு தொழில் செய்வதற்கும் அனுமதிக்கக் கோரி கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் மேற்கொண்டு வரும் தொடர் போரட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் எந்த குறையுமின்றி எவரிடமும் கையேந்தாது வாழ்ந்த வளமான இடம். இதனை மீண்டும் எங்களிடம் தாருங்கள். நாங்கள் குடியேறவும் தொழில் செய்யவும் அனுமதியுங்கள். அதுவே இந்த நல்லாட்சி அரசு செய்யும் நன்றிகடனாக அமையும்.

தொடர்ந்து 26 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் கல்வி மற்றும் ஏனைய விடயங்களும் பாதிக்கப்படுகின்றன.

புதிய இடம் ஒன்றையோ அல்லது வேறு யாருடைய இடத்தையோ நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் எங்கள் நிலங்களை தான் கேட்கின்றோம்.

எங்களது போரட்டத்திற்கு பலர் வருகின்றனர். ஆதரவு தருகின்றனர். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

ஆனால் எம்மிடம் வந்து நல்லாட்சியை கொண்டு வந்தவர்களிடம் நீங்கள் அழுத்தத்தை கொடுங்கள் நாங்கள் ஆட்சியில் இருந்தால் உங்களை உங்கள் இடத்தில் குடியேற அனுமதித்திருப்போம் என்று பலரையும் குறைகூறி விட்டு செல்கின்றனர்.

முன்னைய அரசுடன் ஆட்சியதிகாரங்களை வைத்திருந்த போது, எங்களுக்கு சாதாரணமாக சென்று தொழில் செய்து திரும்பக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தித்தராத அரசியல் தலைமைகள் இப்போது பலரையும் குறை கூறுகின்றது.

எனவே எல்லோருமே ஒன்றிணைந்து எங்களது நிலத்தை எங்களுக்கு மீட்டுத்தாருங்கள் என்று இரணைதீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like