கிளிநொச்சியில் சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்பட்ட நிலை!

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் சிகிச்சை அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள கர்ப்பவதிகளுக்கான சகல சிகிச்சைகளும்; கிளிநொச்சி மாவட்டபொதுவைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று(26) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதியில் போதிய வைத்தியர்கள் இன்மையால் 90 வரையான கர்ப்பவதிகள் சிகிச்சை வழங்கப்படாது திருப்பியனுப்பப்பட்டனர்.

பூநகரி, பளை, கண்டாவளை, கரைச்சி ஆகிய பிரதேசங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு, மூங்கிலாறு, துணுக்காய், மல்லாவி, பாண்டியன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கர்ப்பவதிகளுக்கான சிகிச்சைகள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம் பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து பல்வேறு போக்குவரத்து நெருக்கடிளுக்கு மத்தியில் பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு 140 இற்கும் மேற்பட்ட கர்ப்பவதிகள் சிகிச்சைக்காக சென்றிருந்தனர்.

இந்நிலையில் நேற்யை தினம் 50 வரையான கர்ப்பவதிகளுக்கு மாத்திரமே சிகிச்சையளிக்கப்பட்டதுடன் ஏனைய90 வரையான கர்ப்பவதிகளும் சிகிச்சை அளிக்கப்படாது திரும்பியனுப்பப்பட்டனர்.

இதனால் பல்வேறு தூரப்பிரதேசங்களிலிருந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வருகை தந்த நிறைமாதக்கர்ப்பிணிகளும் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச்சென்றுள்ளனர்.

இதேவேளை, வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் ஏற்கனவே வைத்தியர் பற்றாக்குறை காணப்படுவதுடன் தற்போது கடமையாற்றி வந்த வைத்தியர் ஒருவருக்கு பதில் வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படாது இடமாற்றத்திற்கு அனுக்கப்பட்டுள்ளமையால் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறை காரணமாக 90 வரையான கர்ப்பவதிகளும் திரும்பியனுப்பப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவொருபுறமிருக்க, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றயல்க்கூறு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்களால் வாராந்தம் நடாத்தப்பட்டு வந்த சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் கர்ப்பவதிகள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் போசாக்கு போன்ற விடயங்களில் பாதிப்புக்கள் ஏற்படும் அபாயநிலை காணப்படுகின்றது. இவ்வாறு மீள்குடியேற்றப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பல்வேறு தரப்புக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

You might also like