இயற்கையின் கோர தாண்டவம் – நூற்றுக்கு மேற்பட்டோர் பலி – 100 பேர் மாயம் – 230 பேர் காயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அதேவேளை 230 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் , 53000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போது மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்துள்ள போதும், மத்திய மலைநாட்டிலுள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால், அங்கிருந்து வரும் வெள்ளம் காரணமாக களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாய கட்டத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏழு மாவட்டங்களில் அரசாங்கத்தினால் அனர்த்த நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தை விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.

தற்சமயம் நிலவும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று நிவாரணம் வழங்குவது பிரதான பணியாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனங்கள், முப்படையினர், பொலிஸார் இதற்காக இணைந்து செயற்படுகிறார்கள்.

இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேக்காலை, களுத்துறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் காலி மாவட்டத்தின் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கேகாலை நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மாத்தறை மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கண்டி மாவட்டத்தில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை குறைவடைந்தாலும் இரவு நேரத்தில் மீண்டும் மழை பெய்யலாம். பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளும் உணவு, மருந்து வகைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் 450 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

அவசர அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிப்பதற்கு 24 மணித்தியால சேவையான 1902 என்ற இலக்கத்திற்கு எந்த இணைப்பிலிருந்தும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You might also like