மாணவர்களின் கையடக்கத்தொலைபேசிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை!

மட்டக்களப்பில் மாணவர்கள் கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் கல்வி மாத்திரமன்றி கலாச்சாரத்திலும் சீரழிவுகள் ஏற்படுவதாகவும், இதற்கு பெற்றோர்கள் காரணமாக இருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர், பெண்கள் பிரிவு நன்னடத்தை பொறுப்பதிகாரி என்.சுசீலா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பொலிஸாரினால் வெள்ளிக்கிழமை (26) விழிப்புணர்வுக்கூட்டம் அதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் என்.சுசீலா பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பிள்ளைகளிடம் உள்ள கையடக்க தொலைபேசிகளை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் நீதி மன்ற அனுமதியுடன் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று நாம் கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்வோம் என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலையத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு “கைத்தொலைபேசியின் பாதிப்புக்களும், மாவட்டத்தின் கலாச்சார சீரழிவுகளும்” எனும் தலைப்பில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வுகளை செய்து வருகின்றார்கள்.

இன்றைய தமிழ் சமூகம் பிள்ளைகள் மீதும், மாணவர்கள் மீதும் கவனக்குறைவால் நடந்துகொள்கின்றது. வயதுவந்த பிள்ளைகளையும், பாடசாலைக்கு செல்லும் மாணவர்களையும் ஒவ்வொரு பெற்றோரும் பாடசாலைக்கு முறையாக செல்கின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.

அதேபோன்று உங்கள் பிள்ளைகளாகிய மாணவர்கள் பாடசாலைக்குப் போறேன் என்ற போர்வையில் திரைப்படமாளிகைக்குப் போகின்றார்கள். இவர்களுக்கு படம் பார்ப்பதற்கு பணம் கொடுப்பது பெற்றோர்கள்.

இவையெல்லாவற்றையும் பெற்றோர்கள் நிறுத்தவேண்டும். அவ்வாறு நிறுத்தாவிட்டால் மாணவர்களின் கல்வி பாதிப்படைகின்றது.

அத்துடன் மாணவர்களின் எதிர்காலம் முழுமையாக பாதிப்படைகின்றது. சில மாணவர்களின் பெற்றோர் மட்டும்தான் தமது பிள்ளைகள் எங்கே மேலதிக வகுப்பு சென்று வருகின்றார்கள் என்று பூரண கவனம் செலுத்துகின்றார்கள். ஏனைய பெற்றோர்கள் பிள்ளைகள் மீது முழுமையான கவனம் குறைவடைந்து காணப்படுகின்றது.

மட்டக்களப்பு நகர்புற பாடசாலை மாணவிகள் அண்மையில் தமது பெற்றோருக்கும், பாடசாலைக்கும் தெரியாமல் கள்ளக்காதலனுடன் உன்னிச்சைக்குளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்கள்.

இதெல்லாம் நடப்பதற்கு காரணம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்த அலைபேசியாகும். எனவே எதிர்வரும் முதலாம் திகதி முன்னர் கையடக்க தொலைபேசிகளை பிள்ளைகளிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள் எனத்தெரிவித்தார்.

You might also like